×

கெலமங்கலம் அருகே 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு தொழிற்கூடம் கண்டுபிடிப்பு-கசடுகளும், சுடுமண் குழாய்களும் குவியல் குவியலாக கிடக்கின்றன

தேன்கனிக்கோட்டை : கெலமங்கலம் அடுத்த பாவடரபட்டி மலைக்குன்றில், 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு தாதுவை உருக்கும் தொழிற்கூடம் இருந்ததற்கான தடயங்கள் மற்றும் பயன்படுத்திய சுடுமண் குழாய்கள், இரும்பு கசடுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த பாவடரபட்டி கிராமத்தையொட்டி சிறு மலைக்குன்று உள்ளது. இங்கு சுமார் 4,200 ஆண்டுக்கு முந்தைய இரும்பை உருக்கி, அதை சுடுமண் குழாய் வாயிலாக எடுத்துச்சென்று அச்சு வார்க்க பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாய்கள் ஏராளமாக குவிந்து கிடப்பதை அறம் வரலாற்று மைய தலைவர் கிருஷ்ணன் மற்றும் நந்தகுமார், கோவிந்தராஜ், சக்திவேல், ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் கள பயணத்தில் கண்டறிந்துள்ளனர்.  

 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாட்டில் இருந்தது என்பதை மயிலாடும்பாறை அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொல்குடி தமிழர்கள் தொடக்க காலத்திலேயே இரும்பை பயன்படுத்தி, ஆயுதங்கள் செய்து விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரும்பை உருக்கி, பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் இருந்துள்ளன. குறிப்பாக குட்டூரை குறிப்பிடலாம். கெலமங்கலம்- ராயக்கோட்டை சாலையில் 10 கிமீ பயணம் செய்து, பஞ்சபள்ளி சாலையில் திரும்பி சற்று தூரத்தில் பாவடரபட்டியை அடையலாம்.

இவ்வூரின் பின்பகுதி ரயில்வே தண்டவாளங்களை கடந்து சென்றால், பச்சை பசேலென 2 மலைக்குன்றுகள் நம்மை வரவேற்கிறது. இதில் 2வது மலைக்குன்றில் 20 அடி அகலத்தில் இரும்பு கசடுகளும், சுடுமண் குழாய்களும் குவியல் குவியலாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த இடத்தில் சிறிய அளவில் இரும்பை உருக்குவதற்கான தொழிற்கூடம் இருந்திருக்க வேண்டும். அதற்கான தாது பொருட்களும் பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. கொதிகலன் மூலம் இரும்பு தாதுக்களை உருக்கி அதிலிருந்து கசடுகளை மட்டும் பிரித்தெடுத்து விட்டு உருக்கிய இரும்பு குழம்பை, சுடுமண் குழாய்கள் மூலம் செலுத்தி, அச்சு வார்பில் நிரப்பி வைத்து தேவையான ஆயுதங்களாக மாற்றி இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் கசடுகளும், சுடுமண் குழாய்களும் நிறைய குவிந்துள்ளது. தமிழக தொல்லியல் துறை இந்த இடங்களில் கள ஆய்வு செய்யவேண்டும். மேலும் பானை ஓடுகளும், கசடுகளும், நிறைந்து கிடக்கின்றன. இந்த நிலபரப்பில் அகழாய்வு செய்தால் நிறைய வரலாற்றுத் தடயங்கள் வெளிவரும். இதே இடத்தில் இரண்டு நடுகற்கள் இருக்கின்றன. 13 அல்லது 14ம் நூற்றாண்டை சேர்ந்தவை இந்த 2 நடுகற்கள் என்பது கண்டறியப்பட்டது. முதல் நடுகல் பாதிக்கும் மேல் மண்ணில் புதைந்திருந்தன. மண்ணை விலக்கி பார்த்தபோது, ஒரு வீரன் நீளமான ஈட்டி மூலம் புலியை தாக்குவது போல் காட்சியுள்ளது.

நமது தொல்குடிகளின் தொழிலே ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்பது தான். அப்படி கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் போது பசு மற்றும் எருதுகளை, புலி தாக்க வந்துள்ளது. அவற்றை நீளமான ஈட்டியை கொண்டு தலைபகுதியில் வீரன் தாக்கியுள்ளான்.  தாக்குதல் நடத்திய பின், வீரன் இறந்துள்ளான். இதன் நினைவாக எடுக்கப்பட்ட இந்த நடுகல்லில், கம்பீரமான வீரனின் சிற்பமும், புலியும், அதன் வால் பகுதியும், மேற்பகுதியில் ஒரு காளை, 2 பசு செதுக்கப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. எனவே, இது புலிகுத்தப்பட்டான் நடுகல் ஆகும். மேலும் இதன் அருகில் இன்னொரு நடுகல் இரண்டாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Kelamangalam , Dhenkanikottai: A 4,200-year-old iron ore smelter on the Pavatarapatti hill next to Kelamangalam.
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்