மயிலாடுதுறை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் இன்ஜின் பழுதால் ரயில் நிறுத்தம்: நள்ளிரவில் பயணிகள் பாதிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ரயில் இன்ஜின் பழுதாகி நின்றதால், முக்கிய வழித்தடங்களில் 3 மணி நேரத்திற்கு மேலாக இரவு நேரத்தில் ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சீர்காழி அருகே கொள்ளிடம் ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரயில் பழுதானதால், பாலத்தை விட்டு வெளியே வரமுடியாமல் சிக்கியது. இதனால் அந்தவழியாக செல்லக்கூடிய 3 ரயில்கள், 3 மணிநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கொள்ளிடம் ரயில்வே நிலையத்தில் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லக்கூடிய பயணிகள் ரயில் மாலை 6 மணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல சென்னையில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்செந்தூர் செல்லக்கூடிய விரைவு ரயில் சிதம்பரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல திருப்பதியில் இருந்து மன்னார்குடி செல்லும் பாமினி ரயில் வல்லம்படுகையில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து மயிலாடுதுறை வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும், சுமார் 3 மணிநேரம் தாமதமாக சென்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.              

Related Stories: