மாத்திரைகளாக விழுங்கி விமானத்தில் கோவை வந்தார் ரூ. 2.68 கோடி போதைப்பொருள் கடத்திய உகாண்டா பெண் கைது; புழல் சிறையில் அடைப்பு

பீளமேடு: மாத்திரையாக விழுங்கி கோவைக்கு விமானம் மூலம் ரூ. 2.68 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த உகாண்டா  நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல்  சிறையில் அடைக்கப்பட்டார். சார்ஜாவிலிருந்து கோவைக்கு கடந்த 6ம் தேதி  வந்த ஏர் அரேபியா விமான பயணிகள் சோதனையிடப்பட்டனர். அப்போது சாண்ட்ரா நான்டெசா (33) என்ற உகாண்டா  நாட்டு பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்டார். அவரை பிடித்து விசாரித்ததில் அவரது வயிற்றில் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அந்த போதைப் பொருளை எடுப்பதற்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக போதைப்பொருட்கள் முழுவதும் கைப்பற்றப்பட்டன. அவர் கடத்தி வந்தது மெர்தா மெட்டாமைன்  என்ற போதைப்பொருளாகும். 890 கிராம்  போதைப்பொருளை 81 மாத்திரைகளாக மாற்றி  விழுங்கியுள்ளார். அதன் மதிப்பு  சர்வதேச மார்க்கெட்டில் ரூ.2.68 கோடி என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உகாண்டா பெண் கைது செய்யப்பட்டார். அவர், நேற்று பிற்பகல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில்  வைக்க நீதிபதி லோகேஷ்வரன் உத்தரவிட்டார். அதன்பேரில் உகாண்டா பெண் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: