பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது: திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவாரூர்: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (39). இவர், ஒன்றிய அரசின் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனது மனைவி ஜோஸ்பின் மேரியின் பெயரில் வீடு கட்டுவதற்காக ஊராட்சி மன்ற மூலம் அனுமதி பெற்றுள்ளார். இதில் முதல் தவணை தொகையை தனக்கு ஒதுக்கும்படி ஊராட்சி செயலர் குமாரிடம் (42) கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  

லஞ்சம் கொடுக்க விரும்பாத பயனாளி குமார், இதுதொடர்பாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.10ஆயிரத்தை ஊராட்சி செயலரிடம் வழங்குவதற்காக நேற்று மதியம் அலுவலகத்திற்கு பயனாளி குமார் சென்றார். அங்கு அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலரிடம் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான போலீசார், அலுவலகத்திற்குள் புகுந்து ஊராட்சி செயலர் குமாரை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: