×

குட்கா, கஞ்சா போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை: பேரவையில் முதல்வர் உறுதி

தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான மாவா, குட்கா, ஹன்ஸ் போன்ற பொருட்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்பவர்கள், கடைகளில் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோரை கண்காணித்து திடீர் சோதனைகளை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தொடர்புடையோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசின் உத்தரவிட்டதன் பேரில், கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்டவை கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஓராண்டு காலத்தில் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இக்குற்றத்தில் ஈடுபடுவோர்மீது தடுப்புக்காவல் சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அக்குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா பயிரிடுதல், கடத்துதல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவதை தவிர்க்கக்கூடிய வகையில்,  அவர்களுக்கு மாற்றுத் தொழிலில் ஈடுபட உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

இக்குற்றங்களில் ஈடுபடுவோர், அவர்களது கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யவும், போதை பொருள் தடுப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2021ம் ஆண்டு மே முதல் 2022ம் ஆண்டு மார்ச் வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக, 7,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,837 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுள் 648 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து, ₹31 கோடியே 76 லட்சத்து 89,140 மதிப்புள்ள 43,228 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோன்று, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக, 35,038 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36,293 பேர்கைது செய்யப்பட்டதுடன், அவர்களுள் 720 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.  அவர்களிடமிருந்து, ₹66 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 249 மதிப்புள்ள 3 லட்சத்து 84 ஆயிரத்து 972 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.  

இத்துறைக்கு பொறுப்பேற்றதும் கூறிய என் முதல் அறிவுரை - “பள்ளி, கல்லூரி வளாகங்களில் குட்கா, கஞ்சா விற்பனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என்று அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறேன். தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு குட்கா, கஞ்சா என்ற நிலையை அறவே ஒழிக்க வேண்டும்” என்ற அடிப்படையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது.  கஞ்சா விற்பனை செய்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, கல்வி நிறுவனங்கள் இருக்கக்கூடிய 200 மீட்டர் தொலைவிற்குள் போதை பொருட்கள் விற்பவர்களுக்கு 3 வருடம் முதல் 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், போதை மருந்துகள் மற்றும் மனமயக்க பொருட்கள் தடைச் சட்டம், 1985-ல் உரிய திருத்தங்கள் செய்ய தேவையான கருத்துருக்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்மீது ஒப்புதல் பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும் என்ற உறுதியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 மணி நேரம் முதல்வர் பதிலுரை: சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் மதியம் 11.52 மணிக்கு பதில் அளிக்க தொடங்கினார். தனது பதிலுரையை மதியம் 12.45 மணிக்கு முடித்தார். இதைத்தொடர்ந்து, 81 அறிவிப்புகளை வாசித்தார். அப்போது நேரம் 12.51 ஆகும். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக 59 நிமிடங்கள், சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசினார். அவரது பேச்சுக்கு இடையே திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags : CM ,Assembly , Gutka, drastic action to eradicate cannabis drugs: CM confirms in Assembly
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...