சென்னையில் சட்டவிரோத குடியிருப்பு ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பை அகற்ற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: ‘சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடையில்லை’ என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான அனைத்து இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயையொட்டி ஆர்.ஏ.புரம், இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 259 வீடுகள் இருக்கிறது. பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை விசாரித்த நீதிமன்றம், வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அதனை பெற்றுக்கொள்ள அப்பகுதி மக்கள் மறுத்த நிலையில், கடந்த 8ம் தேதி  ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடந்தது.

இந்நிலையில் ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தனியார் சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வீல்கர், அபாய் மற்றும் ஜெ.பி.பரிதிவாலா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மாதவி திவான், சென்னை மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் குமணன், தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அதில், ‘ஆர்.ஏ.புரம் விவகாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை தான் அரசு செயல்படுத்தி வருகிறது. அங்கு வசித்த மக்களில் பலர் காலி செய்துள்ளனர். ஆனால், தற்போது இருப்பவர்கள் தான் காலி செய்ய மறுக்கிறார்கள். அவர்களால் தான் பிரச்னை எழுந்துள்ளது. அதனால் எங்களுக்கான பணியை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என தெரிவித்தனர்.  மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ் ஆஜராகி தற்போதையை நிலையை வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாநில அரசு அதனை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மாநில அரசின் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை. ஆக்கிரமிப்பை நீக்கி விட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் கடமை. அதனை அவர்கள் செய்ய எந்தவித தடையும் கிடையாது. இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் காலி செய்வதற்கு குறிப்பிட்ட காலம் அவகாசம் வழங்கியிருந்தால் அதை அவர்கள் கடைபிடித்து அதற்கான நோட்டீசை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு உத்தரவை அமல்படுத்துவது அரசின் கடமை, அதை தானே தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார்.ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் உரிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தரப்பில் பயன்படுத்தலாம். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துங்கள்.

அதனை நீர்த்துப் போக செய்யும் எந்த ஒரு காரணத்தையும் நீதிமன்றம் ஏற்க விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பாளர்களை மாற்றலாம். இந்த இடைக்கால மனுக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2011ம் ஆண்டு  உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுத்து நிறுத்தும் நோக்கில் உள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. அதில் எந்தவித முகாந்திரமும் கிடையாது. அதனால், இதுதொடர்பான அனைத்து இடைக்கால மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேவேளையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12க்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்று இடம் வழங்கப்பட்டது ஆகியவை தொடர்பாக தமிழக அ ரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக முதல்வருக்கு பாராட்டு; வழக்கு விசாரணையின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வீல்கர் பாராட்டி பேசினார். அதில், ‘‘ஆர்.ஏ.புரம் விவகாரத்தை பொறுத்தமட்டில் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அறிவிப்பை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளீர்கள். அதுவே மிகப்பெரிய உறுதிமொழி தானே? அவ்வாறு சட்டப்பேரவையில் தெரிவிப்பது என்பது சாதாரண விஷயம் ஒன்றும் கிடையாது. ஒரு விஷயத்தை சட்டமன்றத்திலேயே அவ்வாறு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்றால், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார் என்பது மிகத்தெளிவாக தெரிகிறது’ என கூறினார்.

Related Stories: