அசானி புயல் எதிரொலி தமிழகத்தில் பரவலாக மழை: ரயில் நிலைய கூரை பறந்தது

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும் ரயில் நிலையங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.  

வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய தீவிர புயலான அசானி புயல், நேற்று காலை மத்திய மேற்கு பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்தது. அதன் காரணமாக வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக  ஊத்தங்கரை, திருப்பத்தூர் பகுதியில் 50 மிமீ மழை பெய்தது. நந்தியார், லால்குடி, தென்பரநாடு, காட்டுக்குப்பம், புடலூர் 40 மிமீ, புள்ளம்பாடி, ஆலங்காயம், விரிஞ்சிபுரம், ஆம்பூர், மேலத்தூர், ஆத்தூர், கரியகோவில் 30 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று 10 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் செங்கல்பட்டு ரயில் நிலைய கூரைகள் பீய்ந்து காற்றில் பறந்தன. மேலும் மரம் ஒன்று காற்றின் வேகம் தாங்காமல் மாட்டின் மேல் கீழே விழுந்ததால், மாடு அதன் அடியில் சிக்கி இறந்தது. கடலோரங்களில் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.

இது தவிர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் தீவிர அசானி புயல் இன்று படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த தீவிர புயலான அசானி, நேற்று காலையில் இருந்து நேற்று இரவு வரையில் வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தது.

இன்றைய நிலையில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து  வட ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய  மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு வரும்.  இதற்கிடையே தீவிரத்  தன்மை  குறைந்து புயலாக மாறியது. இன்று மேலும் வலுவிழந்து வட கிழக்கு திசையில் பயணித்து கொல்கத்தா பகுதிக்கு சென்றுவிடும்.

இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் இன்று,  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 12 மற்றும் 14ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

வங்கக் கடலில் அசானி புயல் இருப்பதால், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசுவதுடன் இடையிடையே 85 கிமீ வேகத்திலும்  வீசும். ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையில், மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில்  பலத்த காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால், 12ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமானங்கள், ரயில்களின் வழி மாற்றம்: ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் அம்பேத்கர் கூறுகையில், ‘அசானி புயல் நிவாரண பணிகளுக்காக தேசிய, மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பலத்த காற்று காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் மாற்றுப்பாதையில் விடப்பட்டது’ என்றார்.

Related Stories: