×

காசிமேட்டில் ரூ.98 கோடியில் நவீன மீன்பிடி துறைமுகம்: ஒன்றிய அமைச்சர் முருகன் தகவல்

சென்னை: சென்னை காசிமேட்டில் ரூ.98 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் முருகன் கூறினார். மீனவர்களின் தேவைக்கேற்ப பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு கூடிய மீன்பிடி துறைமுகத்தை  மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் உயரதிகாரிகளுடன் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை  இணை அமைச்சர் முருகன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்துவது குறித்த மிகப்பெரிய அறிவிப்பை கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். இதன்படி, ரூ.98 கோடி செலவில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய பதப்படுத்தும் அரங்கம், ஐஸ் குடோன் உள்ளிட்டவை இங்கு ஏற்படுத்தப்படவுள்ளது. பல்வேறு வசதிகளை கொண்ட நவீன மீன்பிடி துறைமுகமாக இது உருவாக உள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில்முனைவோருக்கு 60 சதவீத மானியத்துடன் கூடிய வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தர உள்ளோம்.

இன்னும் இரண்டு மாதத்தில் காசிமேடு துறைமுகத்திற்கான டெண்டர் விடப்படும். 2015ம் ஆண்டில் இருந்து மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7,500 கோடி முதலீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையில் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம். மீனவர்களின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு. அதற்காக ஒன்றிய அரசு தனிக்கவனம் செலுத்தும். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கடல்பாசி பூங்கா ஏற்படுத்தப்படவுள்ளது. கடல்பாசி தொழில் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பூங்காவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான இடத்தேர்வு இன்னும் 10 முதல் 15 நாட்களில் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

Tags : Coimbatore ,Union Minister ,Murugan , Rs 98 crore modern fishing port in Coimbatore: Union Minister Murugan
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்