உபர் கோப்பை பேட்மின்டன் இந்திய மகளிர் அணிக்கு தொடர்ச்சியாக 2வது வெற்றி

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் உபர் கோப்பை பேட்மின்டன் தொடரின் டிபிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, முதல் லீக் போட்டியில்  4-1 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது  லீக் போட்டியில் நேற்று  இந்தியா - அமெரிக்கா மோதின.  ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, ஆகர்ஷி காஷ்யப், அஷ்மிதா சாலிஹா ஆகியோர் நேர் செட்களில் அமெரிக்காவின் ஜென்னி கய், எஸ்தர் ஷி, நடாலியா சி ஆகியோரை வீழ்த்தினர். இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின்  தனிஷா கிரஸ்டோ -  திரிசா ஜாலி இணை 2-0 என நேர் செட்களில்  பிரான்செஸ்கா கார்பெட் - அலிசன் லீ ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில்  அமெரிக்காவின் லாரன் லாம் - கோடி தங் லீ ஜோடி  21-12, 17-21, 21-13 என்ற செட்களில் இந்தியாவின் சிம்ரன் சிங் - ரித்திகா ஜோடியை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா நாக்-அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா - கொரியா மோதுகின்றன. கொரிய மகளிரும் முதல் 2 லீக் போட்டியிலும் வென்று ‘சுற்று 16’க்கு ஏற்கனவே முன்னேறி உள்ளது.

Related Stories: