வனத்துறையின் தடையில்லா சான்றிதழ் கிடைத்தால் பழவேற்காடு பகுதி சுற்றுலா தலமாக்கப்படும்: துரை.சந்திரசேகர் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் மதிவேந்தன் பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் (காங்கிரஸ்) பேசுகையில்: பழவேற்காடு என்பது வெறும் மீன்பிடி துறைமுகம் மட்டுமல்ல. அதில் சில வியப்பூட்டும் வரலாற்று உண்மைகளும் இருக்கின்றன. இந்தியாவின் இரண்டாவது உவர் நீர் ஏரி. சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அதேபோல, டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், சோழர்கள், விஜய நகர பேரரசு ஆகியோரின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதி. இங்கே இஸ்லாமிய பெருமக்கள் வழிபடுகிற பள்ளிவாசல் நிழல் கடிகாரம், டச்சுக்காரர்களின் கல்லறை, கலங்கரை விளக்கம், ஏரியும், கடலும் கைகுலுக்குகிற முகத்துவாரம் ஆகியவை உள்ளன.

அதைவிட குறிப்பாக, அண்ணாமலைச்சேரி மற்றும் பழவேற்காடு பகுதியிலுள்ள பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 20,000 அரிய வகை பறவைகள் அயல்நாடுகளிலிருந்து, குறிப்பாக, சைப்ரஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வருகின்றன. இதுபோன்ற சிறப்புவாய்ந்த பழவேற்காடு பகுதியை சுற்றுலாதலமாக அறிவித்தால் நன்றாக இருக்கும், என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்: எந்த இடத்தையும் அரசு சுற்றுலாதலமாக அறிவிப்பதில்லை. இருப்பினும், பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிப்பகுதி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகும்.

இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பறவைகள் வந்து தங்குவதால், இந்த இடம் பறவைகள் சரணாலயமாக வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏரிப்பகுதி, கடற்கரைப்பகுதி ஆகிய இரண்டு பகுதிகளும் வனப்பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாகும். இங்குள்ள இயற்கை வளங்கள் பாதிக்காமலும், வரும் பறவைகளுக்கு இடையூறு இல்லாமலும்தான் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் பணிகளை மேற்கொள்ள இயலும். அந்த பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், வனத்துறையின் தடையில்லா சான்றிதழும், வன விலங்கு வாரியத்தின் சான்றிதழும் பெறப்பட வேண்டும். அந்த இரு தடையில்லா சான்றிதழ்களும் பெறப்பட்டால், நிதிநிலைமைக்கேற்ப பரிசீலிக்கப்படும். ஏரி பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது. வனத்துறையின் அனுமதி பெறப்பட்டால், சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்ளலாம், என்றார்.

Related Stories: