×

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு சென்னை, கோவை உட்பட 40 இடங்களில் சிபிஐ ரெய்டு: ஒன்றிய உள்துறை அதிகாரிகளும் உடந்தை

புதுடெல்லி: வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ‘வௌிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் - 2010’ன் கீழ், இந்த முறைகேடுகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நன்கொடையை பெறுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், இடைத்தரகர்கள் இணைந்து கூட்டாக செயல்படுவதாக சிபிஐக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதன் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய அதிகாரிகளின் செயல்பாடுகள், இடைத்தரகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளை நாடு முழுவதும் சிபிஐ கண்காணித்து வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். டெல்லி, சென்னை,  கோவை, ஐதராபாத், மைசூர் உட்பட பல்வேறு நகரங்களில் சோதனை நடைபெற்றது. இதில், முறைகேடுகளுக்கு துணை போன ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இடைத்தரகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் 6 பேர் சிக்கியுள்ளனர். மேலும், ஹவாலா மோசடியில் தொடர்புள்ள ரூ.2 கோடியும் சிக்கியது. சோதனை தொடர்ந்து நடக்கிறது. இதில், மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : CBI ,Chennai ,Coimbatore ,Union Home Ministry , CBI raids 40 locations, including Chennai and Coimbatore: Union Home Ministry officials complicit
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...