×

அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கி வரும் நிலையில் பஞ்சாப் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது குண்டு வீச்சு: காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைவரிசை

மொகாலி: பஞ்சாப், அரியானாவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் சிக்கிவரும் நிலையில், பஞ்சாப் மாநில உளவுத்துறை தலைமையகம் மீது ராக்கெட் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப்  மாநிலம், மொகாலி அடுத்த சோஹ்னாவில் உளவுத்துறை புலனாய்வு அலுவலகத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு உயர் பாதுகாப்பு கொண்ட, இந்த கட்டிடத்தின் ‘செக்டார் 77’ என்ற கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மீது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

விசாரணையில், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டது தெரிந்தது. மாநிலத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி சண்டிகரில் உள்ள புரைல் சிறைக்கு அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. சில  நாட்களுக்கு முன் அரியானா மாநிலம், கர்னாலில் பயங்கர ஆயுதங்களுடன் 4 காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சிக்கினர். கடந்த ஞாயிறன்று, பஞ்சாபின் தரண் தரண் மாவட்டத்தில் 1.50 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளுடன் இரண்டு பேர் கைது  செய்யப்பட்டனர்.

தீவிரவாதிகள் அடுத்தடுத்து சிக்கி வரும் நிலையில், உளவுத்துறை தலைமையகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக, பஞ்சாப் டிஜிபி மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் மொகாலியில், இம்மாநில முதல்வர் பகவந்த் மான் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாபின் அமைதியை கெடுக்க முயற்சிக்கும் யாரும் தப்பமாட்டார்கள். அவர்களின் வருங்கால சந்ததியினர் நினைவில் வைத்திருக்கும் வகையில் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள்,’ என்றார்.

* கோழைத்தனம்: -கெஜ்ரிவால்
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க விரும்புபவர்களின் கோழைத்தனமான செயல் இது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை மாநிலத்தில் உள்ள தனது கட்சியின் அரசாங்கம் உறுதி செய்யும்’ என்று கூறி உள்ளார்.

* நாக்பூர் ரயில் நிலையம் அருகே வெடிகுண்டு பை
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், ‘நாக்பூர் ரயில் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே கேட்பாரின்றி கிடந்த பையை போலீசார் கைப்பற்றினர். அதில், 54 டெட்டனேட்டர்கள் இருந்தன. இது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

* இமாச்சல் முதல்வருக்கு எச்சரிக்கை
அமெரிக்காவில் இருந்து செயல்படும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு’ (எஸ்எப்ஜே) வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவில், ‘இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் மோதலைத் தொடங்க வேண்டாம்.  காலிஸ்தான் கொடியை உயர்த்துவதற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் வன்முறை செய்வோம்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Punjab , Bomb blast at Punjab intelligence headquarters as militants continue to be trapped: Khalistan supporters handcuffed
× RELATED முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்