ராணுவத்துக்கு எதிராக போரிட ஆட்கள் தேர்வு 10 குற்றவாளிகளுக்கு விதித்த ஆயுள் தண்டனை அதிகரிப்பு: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிட ஆட்களை தேர்வு செய்து அனுப்பிய வழக்கில்  கேரளாவை சேர்ந்த 10 பேரின் தண்டனையை கேரள உயர் நீதிமன்றம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு,  அக்டோபர் மாதம் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, பலரை கொன்றது. இந்த தீவிரவாதிகளில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிடுவதற்காக கேரளாவில் இருந்து ஆட்களை தேர்வு செய்து அனுப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 20க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரித்த கொச்சி சிறப்பு நீதிமன்றம், 13 பேருக்கு  இரட்டை ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. இந்த தண்டனையை அதிகரிக்கும்படி, கேரள உயர் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 10 பேருக்கான தண்டனையை அதிகரித்துள்ளது. 3 பேரை விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் ஜபாருக்கு விதிக்கப்பட்டு இருந்த இரட்டை ஆயுள் தண்டனை, 6 ஆயுள் தண்டனையாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. நசீர் என்பவரின் இரட்டை ஆயுள் தண்டனை 5 ஆயுள் தண்டனையாகவும், புகாரி மற்றும் சர்பாஸ் நவாஸ் ஆகியோரின் 3 ஆயுள் தண்டனை, 5 ஆயுள்  தண்டனையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேருக்கு  விதிக்கப்பட்டிருந்த இரட்டை ஆயுள் தண்டனை 4 ஆயுள் தண்டனையாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 3 பேரை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Related Stories: