×

அந்தியூர் அருகே 3 கோயில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அந்தியூர்: அந்தியூர் அருகே 3 கோயில்களில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆப்பக்கூடல் அருகேயுள்ள ஒரிச்சேரிபுதூரில் ஓங்காளியம்மன் மற்றும் சின்ன ஓங்காளியம்மன் கோயில்கள் உள்ளன. இன்று காலை பூசாரி வழக்கம் போல் கோயிலில் பூஜை செய்ய வந்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு உண்டியல் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, சாமி  கழுத்தில் இருந்த நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து எஸ்.ஐ.,க்கள் கோவிந்தராஜ், செபஸ்தியான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் அருகிலுள்ள ஒரிச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், பூட்டை உடைத்து சாமி நகைகளை மர்ம நபர்கள் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது, அது கவரிங் நகைகள் என தெரிய வந்ததால், கோயில் வாசலில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்தது என்பதால், அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் நகை, பணம் திருட்டு போகவில்லை.   

ஆனால், ஓங்காளியம்மன் கோயிலில் ரூ.ஒரு லட்சம் பணமும், சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ரூ.3 ஆயிரம் பணம் திருட்டு போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இக்கோயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இத்திருட்டு சம்பவம் குறித்து ஆப்பகூடல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கோயில்களில் திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Antheur , Anthiyur, 3 Temple, breaking the lock, jewelry, money, theft
× RELATED பர்கூர் வனப்பகுதியில் கீழே விழுந்த பெண் யானை பலி