நாக்பூர் ரயில் நிலையத்தில் மர்ம பையில் வெடிபொருள் : உடனடி நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

நாக்பூர்: நாக்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பையில் வெடிபொருள் இருந்ததால், அங்கு நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. தகவல் கிடைத்ததும், ஜிஆர்பி மற்றும் ஐபிஎஃப் படையினர் அந்த பகுதிக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் 54 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நாக்பூரின் ரயில்வே அதிகாரி (மத்திய ரயில்வே) அசுதோஷ் பாண்டே கூறுகையில், ‘ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் மர்ம பையை ஆய்வு செய்தனர். அப்போது பையில் மிகக் குறைந்த அளவிலான வெடிபொருட்கள் கொண்ட 54 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக எதிரிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தின் அருகே இந்த மர்ம பை நீண்ட நேரமாக இருந்தது. இதனை பார்த்த காவலர் ஒருவர் மூலம் தகவல் கிடைத்தது. வெடிகுண்டு பையை வைத்துவிட்டு சென்ற நபரை அடையாளம் காண, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: