ஷாருக்கானின் பக்கத்து பங்களாவில் தீ: மூச்சுத்திணறலால் தீயணைப்பு வீரர் மயக்கம்

மும்பை: நடிகர் ஷாருக்கான் வசிக்கும் பங்களாவின் பக்கத்து பங்களாவில் தீ விபத்து ஏற்பட்ட போது, தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயக்கமடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில்  ஆடம்பரமான பங்களாக்கள் உள்ளன. அதேபகுதியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மன்னத் பங்களாவும் உள்ளது. இந்நிலையில் ஷாருக்கானின் பங்களாவுக்கு அடுத்தபடியாக உள்ள உயரமான கட்டிடத்தின் 14வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அடுக்கு மாடியில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியது.

தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் தீயை அணைக்கும் போது 31 வயதுடைய தீயணைப்பு வீரர்  கவுஷல் கஜன்சிங் ராஜ்புத்மூச்சுத்திணறலால் பாதிப்படைந்தார். மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்றிரவு 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இரவு 10.25 மணியளவில் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: