ராக்கெட் மூலம் வீசப்படும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பஞ்சாப் உளவுத்துறை தலைமையகம் மீது குண்டுவீச்சு: காலிஸ்தானிகளின் கைவரிசையா? என விசாரணை

மொஹாலி: பஞ்சாப் உளவுத்துறை தலைமையகத்தின் மீது ராக்கெட் கையெறி வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில், காலிஸ்தான் தீவிரவாதிகள் அமைப்புக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் மொஹாலி அடுத்த சோஹ்னாவில் உளவுத்துறை புலனாய்வு அலுவலகத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. உளவுப் பிரிவு, போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை, குண்டர் தடுப்புப்  படை மற்றும் மாநில காவல்துறையின் பல பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் இவ்வலுவலகத்தின் மூன்றாவது மாடியின் மீது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. பயங்கர சத்ததுடன் வெடிகுண்டுகள் வெடித்ததில், கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சரிந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

இதுகுறித்து போலீஸ் பஞ்சாப் டிஜிபி விகே பாவ்ரா கூறுகையில், ‘சிறிய வகையிலான ராக்கெட் மூலம் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். ராக்கெட் புரொபல்டு கிரேனேட் எனப்படும் கையெறி குண்டுகளை தோளில் சுமந்துவாறு ஏவியுள்ளனர். பெரும்பாலும் டேங்க் எதிர்ப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆயுதங்கள் எதிரிகளின் இலக்கைத் தாக்க உதவும் ராக்கெட் மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 700 மீட்டர் தூரம் வரை வீசப்படும் இந்த வெடிகுண்டுகள் டேங்கர், கவச கார், ஹெலிகாப்டர் போன்றவற்றை கூட தாக்க முடியும். ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கர்னாலில் நான்கு தீவிரவாதிகளை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து ஏராளமான தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் அவர்களிடம் இருந்த 3 கையெறி வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டன. இதன் மூலம் காலிஸ்தான் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நால்வரும் தடை செய்யப்பட்ட இயக்கமான பாபர் கல்சா இன்டர்நேஷனல் என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள். அதேபோல், இமாச்சல் பிரதேச அரசின் தர்மசாலா சட்டப் பேரவை வளாகத்தின் வாயிற்கதவில் காலிஸ்தான் அமைப்பினரின் கொடிகள் பறக்கவிட்ட விவகாரத்திற்கும், உளவுதுறை அலுவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.  காலிஸ்தான் அமைப்பினர் அடுத்தடுத்த தாக்குதல்களால், பஞ்சாப் எல்லையை சுற்றியுள்ள மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்ய தயாரிப்பு குண்டா?

மொஹாலி தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிஜி (ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டு,) ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆர்பிஜி-26 அக்லெனாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 2016ல் வெளியான ரஷ்யாவின் ஆர்பிஜியை போல், இந்த ஆர்பிஜியும் உள்ளது. இதனைப் பார்க்கும் போது ரஷ்யாவில் தயாரித்த ஆர்பிஜியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தேசிய புலனாய்வு குழு இன்று மொஹாலியில் உள்ள காவல்துறை உளவுத்துறை தலைமையகத்திற்கு வந்து விசாரணை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பஞ்சாப் சி.எம்.பகவந்த் மான் வெளியிட்ட அறிக்கையில், ‘மொஹாலியில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பஞ்சாபின் சூழலை கெடுக்க முயன்றவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

80 மீட்டர் இடைவெளியில் தாக்குதல்

உளவுத்துறை தலைமையக கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் ஒரு காரில் வந்துள்ளனர். அவர்கள் சுமார் 80 மீட்டர் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு குழுவினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர்களை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்த சம்பவமும் நடந்துள்ளது.

விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

மொஹாலி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். மேலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த கட்டிடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத்துறை அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. தடயவியல் குழுவும், சிறப்பு புலனாய்வு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு உளவுத்துறை அலுவலக கட்டிடத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: