இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும்: ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் கருத்து

டெல்லி: இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில, இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் களம் இறக்கப்பட்டதால் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கையில் ஜனநாயகம், உறுதித் தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. மிக அருகில் உள்ள அண்டை நாட்டுடன் வரலாற்று ரீதியான தொடர்பை இந்தியா கொண்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள உதவியை இந்தியா இந்தாண்டு வழங்கியது.

தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து இலங்கை மக்கள் மீண்டு வர இந்தியா உதவி செய்தது. இந்திய மக்களும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளனர். ஜனநாயக வழியில் இலங்கை மக்கள் எடுக்கும் முடிவுகளை இந்தியா ஆதரித்து வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்; ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: