கேரள மாஜி அமைச்சர் வீட்டில் 53 பவுன் கைவரிசை நாகர்கோவிலை சேர்ந்த கொள்ளையன் கைது: நகைகளை விற்க முயன்ற போது சிக்கினார்

திருவனந்தபுரம்: கேரளாவில் புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர் பேபி ஜான். 2 முறை அமைச்சராகவும் இருந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகன் ஷிபு பேபி ஜான். அவரும் முன்னாள் அமைச்சர் ஆவார். கடந்த உம்மன் சாண்டி மந்திரிசபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேபி ஜானின் வீடு கொல்லம் உபாசனா நகரில் உள்ளது. இந்த வீட்டையொட்டி ஷிபு பேபி ஜான் புதிய வீடு ஒன்றை கட்டி அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பேபி ஜான் மரணமடைந்த பிறகு அவரது மனைவி அன்னம்மா பகல் நேரத்தில் மட்டும் தனது வீட்டில் இருப்பாராம்.

இரவில் மகன் ஷிபு பேபி ஜானின் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காலை அன்னம்மா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்ததும் அன்னம்மா அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீடு முழுவதும் சென்று பார்த்துள்ளனர். அப்போது 2வது மாடியில் பீரோவில் வைத்திருந்த 53 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கொல்லம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழக எல்லைகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு கொல்லம் போலீசார் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து நேற்று நாகர்கோவில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை விற்பதற்காக ஒருவர் வந்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த நகைக்கடை உரிமையாளர் உடனே நாகர்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மர்ம ஆசாமியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவில் மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் அவரது பெயர் ராசாத்தி ரமேஷ் என்ற ரமேஷ் (48) என்றும், அவர்தான் கேரள முன்னாள் அமைச்சர் பேபி ஜானின் வீட்டில் கொள்ளையடித்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்த அனைத்து நகைகளையும் போலீசார் அதிரடியாக மீட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த கொல்லம் போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரமேஷை நாகர்கோவில் போலீசார் கொல்லம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒரு திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரமேஷ், சமீபத்தில் தான் விடுதலையாகி இருக்கிறார்.

Related Stories: