×

நள்ளிரவு சூறைகாற்றுடன் பலத்த மழை செங்கல்பட்டு ரயில்நிலைய மேற்கூரை பறந்தது: மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இடி மின்னல், சூறைகாற்று மழை பெய்தது. அதிவேக காற்று வீசியதால் செங்கல்பட்டு, வல்லம், மேலமையூர்  உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்  மேற்கண்ட பகுதிகள் இருளில் மூழ்கின.  அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக, புலிப்பாக்கம் பகுதியில்  ரயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரயில்கள்  ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரயிலில் வந்த பயணிகள் சிரமத்துக் குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மரத்தை அகற்றிய பிறகு ரயில் சேவை துவங்கப்பட்டது. சூறைகாற்றில் செங்கல்பட்டு ரயில் நிலைய மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில்நிலையம் செல்லும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பயணிகள்  சிரமப்பட்டனர். ரயில்நிலைய மேற்கூரை மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார வயர்களில் மரம் விழுந்ததால் பல இடங்களில்  மின்கம்பங்கள் சாய்ந்தன. மின் வயர்கள் அறுந்துவிழுந்தன. இதனால் நள்ளிரவில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மின்சார துண்டிப்பால் தண்ணீர், மின்சாரம்  கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.  பல்வேறு இடங்களில் குடிசை வீடுகள் சேதமடைந்தன. செங்கல்பட்டு அடுத்த உதயம்பாக்கத்தில் பனை மரம் சாய்ந்து விழுந்ததால் பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Railway Station , Storm, rain, Chengalpattu railway station, roof, flew
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!