கோபி அருகே துணிகரம் தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளை

கோபி : கோபி அருகே தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் மலர் நகரை சேர்ந்தவர் டேவிட் சூசை மாணிக்கம் (64). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி இசபெல்லா ஜான்சிராணி (60). கொளப்பலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியை. இவர்களுக்கு சாம்சன் (26) என்ற மகனும், பேபி வளன்டினா (29) என்ற மகளும் உள்ளனர்.

பேபி வளன்டினாவிற்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். சாம்சன் ஆட்டோமொபைல் முடித்து விட்டு எம்.எஸ். படிப்பிற்காக கடந்த 20 நாட்களுக்கு முன் இத்தாலி சென்றுவிட்டார்.கோவை மதுக்கரையில் உள்ள இசபெல்லா ஜான்சிராணியின் அக்காள் ஷீலா வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டேவிட் சூசைமாணிக்கம், இசபெல்லா ஜான்சிராணி, மகள் பேபி வளன்டினா ஆகியோர் கடந்த 6ம் தேதி சென்றனர். அவர்கள் வீட்டின் முன்பக்க காம்பவுண்ட் கேட்டின் சாவியை லக்கம்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் சுரேஷ் என்கிற குருநாதனிடம் கொடுத்து, வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடவும், குருவிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் வைக்குமாறும் கூறி சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் இருந்தவர்கள் டேவிட் சூசை மாணிக்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் படுக்கையறைக்குள் இருந்த பீரோக்களை உடைத்து 65 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்ததும், முன்பகுதியில் மாடிப்படிக்கு கீழே மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ் மிஷினை ஆப் செய்து, மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். கதவின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் மீது சேற்றை பூசி மறைத்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது.

இத்தகவலறிந்த கோபி டிஎஸ்பி ஆறுமுகம் மற்றும் கோபி போலீசார் சம்பவ இடம் வந்து கொள்ளைச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வீரா மற்றும் தடயவியல் அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய் வீரா கொள்ளைச்சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கலிங்கியம் சாலையில் சிறிது தூரம் சென்று திரும்பியது.

Related Stories: