×

வலங்கைமான் ராமர் கோயில் பகுதியில் நிரந்தர பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் : வலங்கைமான் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாத நிலையில் ராமர் சன்னதி பேருந்து நிறுத்தம் பகுதிகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிரந்தர நிழல் கூரை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 50 கிராம ஊராட்சிகள், 70 வருவாய் கிராமங்கள் உள்ளன. வலங்கைமான் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

வலங்கைமான் பகுதியில் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு துவக்கப் பள்ளிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வருகின்றது. வலங்கைமானிலிருந்து தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலை நிமித்தம் செல்லும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் தினசரி இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

வலங்கைமான் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாத நிலையில் மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி செல்லும் பேருந்துகள் வலங்கைமான் ராமர் சன்னதி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்தி வருகின்றனர். பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் திறந்த வெளியிலும், கொட்டும் மழையிலும் காத்திருந்து பேருந்து ஏறும் அவலநிலை உள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர நிழல் கூறை அமைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

பயணிகள் வசதிக்காக மேற்கூறை இல்லாததால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பொது நிதிமூலம் அப்பகுதியில் நிரந்தர மேற்கூறை அமைக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valankhaiman Ramar Temple , Valangaiman: As there is no bus stand in Valangaiman area, the assembly and parliament in the Ramar Sannathi bus stand areas
× RELATED வலங்கைமான் ராமர் கோயில் பகுதியில்...