×

கல்லட்டி சுற்று வட்டாரத்தில் மழையால் சேதமான பகுதிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி :  ஊட்டி அருகே கல்லட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 7ம் தேதி நள்ளிரவில் கொட்டிய கனமழை காரணமாக கால்வாயில் பாறைகள் அடித்து வரப்பட்டு 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலை காய்கறிகள் சேதமடைந்தன. இப்பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைக்குந்தா சுற்று வட்டார பகுதிகளான மேல் கல்லட்டி, அழகர்மலை, சோலாடா, ஆல்காடு, தட்டனேரி, அம்மனாடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 7ம் தேதி இரவு 10 மணியளவில் இடியுடன் கூடிய அதீத கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழை காரணமாக சிறு சிறு பாறைகள் மண் உள்ளிட்டவை கால்வாய் வழியாக அடித்து வரப்பட்டு கல்லட்டி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. சிறு சிறு பாறைகள் அடித்து வீடுகளின் வாசல்கள் முன்பு குவிந்தன. மேலும் இப்பகுதியில் உள்ள நடைபாதையை முழுமையாக அடித்து செல்லப்பட்டதுடன், மண் மற்றும் பாைறகள் கால்வாயில் தேங்கின.

 குடிநீர் குழாய்கள், கழிவுநீர் கால்வாய் போன்றவை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மழை காய்கறி ேதாட்டங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிப்பட்டிருந்த மலை காய்கறிகள் அடித்து செல்லப்பட்டன. விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பிரிங்லர் குழாய்களும் அடித்து செல்லப்பட்டன.

கோடை காலத்தில் பெய்த திடீர் மழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீர் கன மழையால் பாதிக்கப்பட்ட கல்லட்டி பகுதியில் சேதமடைந்த விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். அப்போது சேதமடைந்த சிறு பாலத்தை பார்வையிட்ட கலெக்டர் உடனடியாக கால்வாயை தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி தோட்டக்கலைத்துறை அலுவலர் அனிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Gallatti Circuit , Ooty: Heavy rains lashed the Kallatti area near Ooty at midnight on the 7th.
× RELATED தமிழ்நாட்டில் இன்று 18 இடங்களில் 100...