×

ஊட்டியில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரிந்த கால்நடைகள் சிறைபிடிப்பு-நகராட்சி நிர்வாகம் அதிரடி

ஊட்டி :  ஊட்டி நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றி திரிந்த நிலையில் அவற்றை சிறைபிடித்த நகராட்சி நர்வாகம், அவற்றின் உாிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. ஊட்டி நகரம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி நகரின் சுற்றுப்புற பகுதிகளான எல்க்ஹில், வண்டிசோலை, ஓல்டு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாடு, ஆடு போன்ற கால்நடைகள் வளர்க்க கூடிய உள்ளூர் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை புல்வெளி உள்ள பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பாமல் அவற்றை ஊட்டி நகரில் விட்டு விடுகின்றனர்.

இவை ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் காய்கறி ஏலம் நடைபெறும் பகுதியை முற்றுைகயிட்டு காய்கறி கழிவுகளை உட்கொள்கின்றன. தொடர்ந்து மார்க்கெட் வெளிப்புறம் புளூமவுண்டன், சேட் மகப்பேறு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி, மாரியம்மன் கோயில், மணிகூண்டு, கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிதிரிவதுடன் சாலையிலேயே படுத்து கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

 சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுபடுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, நகருக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. ஊட்டி நகரம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும், தற்போது கோடை சீசன் என்பதாலும் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகளை உலா விடுவதை கால்நடை உரிமையாளர்கள் தவிர்க்காவிட்டால் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என எச்சரித்தனர். இருந்த போதும் கால்நடை உரிமையாளர்கள் அதனை கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் நகராட்சி ஆணையர் காந்திராஜ் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகாராஜன், மேற்பார்வையாளர்கள் செல்வராஜ், நாதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஊட்டி கமர்சியல் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நேற்று சுற்றி திரிந்த சுமார் 5க்கும் மேற்பட்ட மாடுகளை மேற்பட்ட மாடுகளை சிறைபிடித்தனர். தொடர்ந்து அவற்றின் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.


Tags : Caption-Municipal Administration of Livestock , Ooty: Livestock roam around in Ooty causing disturbance to traffic and public
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.