×

குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேரத்தில் திறக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்-போக்குவரத்து பாதிப்பு

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இரவு பகல் என 24 மணி நேரமும் இயங்கிவரும் இந்த சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து வகையான மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 200 பேருக்கு குறையாமல் வந்து மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மகப்பேறு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில மாதங்களாக இரவு நேரங்களில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேர சிகிச்சை இன்றி பூட்டியே கிடக்கிறது. நாள் இரவு நேரங்களில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ உயிரினங்களால் பாதிக்கப்படுபவர்களும், இரவு நேரங்களில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்படும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் இரவு நேரங்களில் சீர்காழி, கொள்ளிடம் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இரவு நேரங்களில் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வழக்கம்போல இயங்க செய்யவும், போதிய மருத்துவ ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குன்னம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் கிராம மக்கள் பொதுமக்கள் புத்தூரிலிருந்து வடரங்கம் செல்லும் நெடுஞ்சாலையில் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து போலீசார் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் புத்தூரிலிருந்து வடரங்கம் செல்லும் சாலையில் ஒரு மணி நேர போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Tags : Gunnam Primary Health Center , Kollidam: There is a Government Primary Health Center at Kunnam village near Kollidam in Mayiladuthurai district.
× RELATED குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் இரவு...