×

பிரசவத்துக்காக என்னை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு 2வது திருமணம் செய்த கணவனை சேர்த்து வையுங்கள்-குறைதீர்வு கூட்டத்தில் 2 கைக்குழந்தைகளுடன் பெண் மனு

வேலூர் : பிரசவத்துக்காக என்னை மருத்துவமனையில அனுமதித்து விட்டு 2வது திருமணம் செய்த கணவனை என்னுடன் ேசர்த்து வையுங்கள் என்று இரட்டை கைக்குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், கடந்த 1996ம் ஆண்டு அரசாணை நடைமுறைப்படுத்தி 29 பட்டப்பெயர்களில் வாழும் முத்தரையர்கள் அனைவருக்கும் ஒரே சாதிச்சான்று, ஒரே சலுகை வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையர்களுக்கு உரிய பங்கீடு வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்’ என்றனர்.

பேரணாம்பட்டு சிந்தகனவாய் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி(29) என்பவர் தனது 4 குழந்தைகளுடன் அளித்த மனுவில், ‘10 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் பேரணாம்பட்டு ஏரிக்குத்தி பகுதியை சேர்ந்த ஏசுவா என்ற ஆட்டோ டிரைவருக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு 5 குழந்தைகள். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரசவத்திற்காக என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை எனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டார். என்னை அடித்து விரட்டி விட்டார். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்’ என்றார்.

மனுவை பெற்ற கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறினார்.வேலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் அளித்த மனுவில், ‘வேலூர் மாவட்டத்தில் லாரிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கியுள்ளனர். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கவேண்டும் என்றனர். மனுவை பெற்ற கலெக்டர் இதுகுறித்து கூட்டம் நடத்தி மணல் அள்ள அனுமதி வழங்கப்படும்’ என்றார்.

மேலும், மாவட்டத்தில் தேவிசெட்டிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றி வரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த பலர் வந்து அளித்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்வதில் கால அவகாசம் வழங்க வேண்டும். அதற்குள் மாற்று இடமும் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். முன்னதாக கூட்டத்தில் 10 பேருக்கு இஸ்திரி பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

போதையில் வந்த மாஜி ராணுவ வீரர்

சின்னபாலம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் அளித்த மனுவை பெற்ற கலெக்டர் அதில் உள்ள விவரங்களின்படி தம்பதியிடம் விசாரித்தார். அப்போது மனு அளிக்க வந்த ஆண், தள்ளாடியபடி பதில் அளிக்கவில்லை. அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை வெளியே அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில், வேலூர் அடுத்த சின்னபாலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வேல்முருகன், அவரது மனைவி சுபாஷினி, சொத்து பிரச்னை சம்பந்தமாக மனு அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன் மீது தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைத்த சத்துவாச்சாரி போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

சர்வர் திடீர் பழுது

வேலூர் கலெக்டர் அலுவகத்தில் மனு அளிக்க வருபவர்களின் மனுக்கள் கணினி முறையில் ஆன்லைனில் பதிவு செய்து ரசீது வழங்கப்படும். ஆனால் நேற்று சர்வர் பழுது காரணமாக கணினியில் விண்ணப்பங்கள் பதிவேற்றுவது தடைபட்டது. இதனால் ஊழியர்கள் கைப்பட எழுதி பதிவு செய்து கொடுத்தனர்.

Tags : Vellore: Double that I should be admitted to the hospital for childbirth and keep my 2nd married husband with me.
× RELATED வெயிலின் தாக்கத்தால் தேவை அதிகரிப்பு; மண் பாண்டங்கள் தயாரிப்பு அமோகம்