×

களக்காடு அருகே வாழைகள் நாசம் ஊருக்குள் புகுந்து கரடிகள் மீண்டும் அட்டகாசம்-வனத்துறையினர் மிரட்டுவதாக விவசாயிகள் புகார்

களக்காடு : களக்காடு அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்த கரடிகள் வாழைகளை நாசம் செய்தன. இரவு காவலுக்கு செல்லும் விவசாயிகளை வனத்துறையினர் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.  நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்தில் கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள், இரவில் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இதுவரை இப்பகுதியில் கரடிகளால் 500க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் கரடிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சாய்த்து அட்டகாசம் செய்தன. இதில் கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் ஜெயராஜ் (50), பாலன் (44), கணேசன் (50), சுப்பிரமணியன் (53) ஆகியோர்களுக்கு சொந்தமான தோட்டங்களிலிருந்த 50க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது.  அறுவடைக்கு தயாரான, குலை தள்ளிய வாழைகளை கரடிகள் துவம்சம் செய்ததால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரடிகள் அச்சுறுத்தலால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

 இதற்கிடையே விளைநிலங்களில் இரவு காவலுக்கு செல்லும் விவசாயிகளை வனத்துறையினர் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயி பாலன் கூறுகையில், ‘கரடிகள் அட்டகாசம் குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். விவசாயிகள் குறைதீர் நாளில் மாவட்ட கலெக்டரிடமும் நேரில் மனு கொடுத்துள்ளோம். இருப்பினும் கரடிகளை விரட்டவோ, கூண்டு வைத்து பிடிக்கவோ, நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இரவில் நாங்கள் விளைநிலங்களில் காவல் பணிக்கு செல்லும் போது, நீங்கள் காவலுக்கு வரக்கூடாது என்றும், அவ்வாறு காவலுக்கு வந்தால் வழக்கு போடுவோம் என்றும் வனத்துறையினர் மிரட்டுகின்றனர். அத்துடன் இங்கு விவசாயம் செய்யக்கூடாது என்றும் கூறுகின்றனர் என்றார்.

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். வனத்துறையினர் மின்வேலிகள் பராமரிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. சிவபுரம், கள்ளியாறு பகுதியில் சிறுத்தை புகுந்து நாய்களை வேட்டையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Attakasam-Forest Department , Kalakkadu: Bears re-entered the town near Kalakkadu and destroyed bananas. Foresters farmers on night patrol
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி