சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை: வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயையொட்டி உள்ளது. இந்த தெருவில் இருந்த 625 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பக்கிங்காம் கரையோரம் இருந்த 366 வீடுகள் அகற்றப்பட்டது. மீதி உள்ள 259 வீடுகளை உடனடியாக அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் அங்குள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் உதவியுடன் இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த கண்ணையா என்பவர் நேற்று முன்தினம் தீக்குளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.ஏ.புரத்தில் வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. அதில் ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிமன்றம் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு இடம் தயாராக உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை. 2011ம் ஆண்டு முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, மாநில அரசு செயல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு மாற்று இடம் வழங்க வேண்டிய வேலையை அரசு செய்யப்படும். ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் குறிப்பிட்ட காலம் அவகாசம் வழங்கினால் அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் கடைபிடிக்க வேண்டும்.

முதலில் காலி செய்வதற்கான நோட்டிசை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். மாற்று இடம் வழங்குவதாக பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளது உறுதிமொழிதானே? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: