இன்றிரவு கரையை கடக்கும் அசானி; 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி புயல் என பெயரிடப்பட்டது.

அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை ஆகிய 33 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள அசானி புயல் இன்று இரவு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது தீவிர புயலாக இருக்கும் அசானி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: