இறுதிச்சடங்கிற்கு சென்று திரும்பியபோது வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி: 16 பேர் படுகாயம்

திருமலை: தெலங்கானாவில் சரக்கு வேன்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம், சில்லர்கி கிராமத்தை சேர்ந்தவர் சவுதர்பள்ளி மாணிக்கம். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தார். இதையொட்டி அவரது உறவினர்கள் சுமார் 25 பேர் நேற்று முன்தினம் 3ம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுவிட்டு, அதன்பிறகு அனைவரும் மீண்டும் ஊர் திரும்பினர். நிஜான்சாகர் மண்டலத்தில் உள்ள ஹாசன்பள்ளி கேட் பகுதியில் சென்றபோது வேன், அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது.

இதில் வேன் நொறுங்கியதில், வேன் டிரைவர் சைலு(25), லச்சவ்வா(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பான்ஸ்வாடா மற்றும் எல்லாரெட்டி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அஞ்சவ்வா(40), வீரமணி(38), சாயவ்வா(40), வீரவ்வா(70), கங்காமணி(45), எல்லையா(45), போச்சய்யா(44) ஆகியோர் இறந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எல்லாரெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வேன் டிரைவர் வேகமாக வந்ததால், விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் மோடி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இறந்தவர்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50 ஆயிரம் நிவாரணம் அறிவித்து டுவி ட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: