டெல்லி ஷாகீன்பாக்கில் பதற்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்து எதிர்ப்பு: புல்டோசருடன் திரும்பி சென்றனர்

புதுடெல்லி: டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு திரும்பினர். சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, வடமாநிலங்களில் பல இடங்களில் இரு பிரிவினர் இடையே வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து புல்டோசர் மூலம் பல வீடுகள், கடைகள் அகற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லி ஜகான்கீர்புரியிலும் இதே போல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க நேற்று புல்டோசருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியானது, கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த பகுதிகளில் முக்கிய இடமாகும். இதனால்அங்குள்ள பொதுமக்கள் ஒன்று கூடி, ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இவர்களுடன் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஓக்லா அமனதுல்லா கான் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். டெல்லி போலீசார் கூறும்போது, ‘‘உரிய அதிகாரிகளிடம் இருந்து  உத்தரவு வந்தால் மீண்டும் இடிக்கும் பணிகள் தொடங்கும்’’ என தெரிவித்தனர். இதன் காரணமாக ஷாகீன்பாக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: ஷாகீன்பாக் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகளுக்கு தடை விதிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஷாகீன்பாக் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிரான மனுக்களை விசாரிக்க முடியாது. வேண்டுமானால் மனுதாரர் உயர்நீதிமன்றத்தை முதலில் அணுகலாம். குறிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உச்ச நீதிமன்றத்தை தற்போது வரையில் நாடாமல் இருக்கும் நிலையில், நீங்கள் தயவுசெய்து அரசியலுக்கான தளமாக நீதிமன்றத்தை மாற்ற வேண்டாம்’’ என தெரிவித்தனர். இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.

Related Stories: