×

செல்போன் பயன்படுத்திய விவகாரம் கோவை சிறையில் கைதிகள் மோதல்

கோவை: கோவை  மத்திய சிறையில் 1,850 கைதிகள் உள்ளனர். இதில் திருட்டு,  வழிப்பறி வழக்கில் கைதான விசாரணை கைதி மன்சூர் என்பவர் சில கைதிகள்  விதிமுறை மீறி செல்போன் பயன்படுத்தி வருவது தொடர்பாக ஜெயிலரிடம்  புகார் தெரிவித்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சிறை  நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மன்சூர் நேற்று முன்தினம் முதல் பிளாக்கில் இருந்து சிறை  நூலகத்தில் புத்தகம் எடுப்பதற்காக சென்றார்.  அப்போது அவரை கைதிகள் சிலர் மறித்து ‘‘எங்களை பற்றி சிறை அதிகாரிகளுக்கு  போட்டு கொடுக்கிறாயா?’’ என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அவரை தகாத வார்த்தையால் திட்டி  அடித்து உதைத்தனர். கற்களாலும் தாக்கினர். மன்சூர் கூச்சலிடவே சிறை அதிகாரிகள்அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், விசாரணை கைதிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிறையில்  கைதிகள் செல்போன் வைத்திருக்கிறார்களா? என  அதிரடி சோதனை நடந்தது.

மதுரை சிறையில் கைதிகள் மோதலில் 2 பேர் காயம்:  மதுரை மத்திய சிறையில், கைதிகளிடையே நேற்று முன்தினம் திடீரென மோதல் ஏற்பட்டது. கஞ்சா கேட்டு இந்த தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த இரு தரப்பு மோதலில்  கைதிகள் சையது இப்ராஹிம், தினேஷ் பலத்த காயம் அடைந்தனர்.  இதைத்தொடர்ந்து சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் இவர்கள் சேர்க்கப்பட்டனர்.


Tags : Coimbatore , Coimbatore jail inmates clash over cell phone use
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...