×

தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா மரியுபோலை கைப்பற்ற தீவிரம்

ஜபோரிஜியா: ஜெர்மனியின் நாஜி படை மீதான வெற்றி தினத்தை ரஷ்யா கொண்டாடிய நிலையில், முக்கிய தெற்கு துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படையை வென்றதன் அடையாளமாக, ஒவ்வொரு ஆண்டும் மே 9ம் தேதியை வெற்றி தினமாக ரஷ்ய ராணுவம் கொண்டாடி வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 11வது வாரமாக தொடரும் நிலையில், இந்த வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலில் கடற்கரை பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் பதுங்கி இருந்த இரும்பு ஆலை மீது ரஷ்ய படைகள் மீண்டும் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

மரியுபோலில் உள்ள இந்த இரும்பு ஆலை மட்டுமே ரஷ்யாவினால் கைப்பற்றப்பட முடியாத பகுதியாக இருந்து வருகிறது. முக்கிய துறைமுக நகரான இதனை கைப்பற்றி விட்டால், உக்ரைனிடம் இருந்து கடந்த 2014ம் ஆண்டில் கைப்பற்றிய கிரீமியா தீபகற்பத்திற்கு தரைவழி மார்க்கத்தை ரஷ்யா உருவாக்க வழிபிறக்கும். இதனால், இதனை விட்டு கொடுக்க விரும்பாத உக்ரைன் படைகள் கடைசி வரை போராடி வருகிறது. ரஷ்யா கெடு விதித்த பிறகும் அவர்கள் இறுதி மூச்சு உள்ள வரை போராட போவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வீடியோ மூலம் அப்படையின் துணை தளபதி ஸ்வியாடோஸ்லாவ் கலீனா பலாமர் கூறுகையில், ``இரும்பு ஆலை மீது ரஷ்ய படையினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.இரும்பு ஆலை பதுங்கு குழிக்குள் பதுங்கி உள்ளவர்களிடம் தேவையான உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லை. சரணடைவது என்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனென்றால், எதிரிக்கு அதை பரிசாக வழங்க கூடாது,’’ என்று தெரிவித்தார். ஐநா, செஞ்சிலுவை சங்கத்தினரின் உதவியுடன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அங்கேயே இறுதி மூச்சுவரை போராட போவதாக அசோவ் படையினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் நடந்த வெற்றி தின ராணுவ அணிவகுப்பில் உரையாற்றிய அதிபர் புடின், ``ரஷ்ய எல்லைகள் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ரஷ்யா மீது தாக்குதலை தொடர உக்ரைன் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல், நேட்டோவில் இணையக் கூடாது என்ற ரஷ்யாவின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டதால் தான் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டியதாயிற்று,’’ என்று கூறினார்.

60 பேர் பலி?: டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சில் பள்ளிகட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கு அடைக்கலம் புகுந்திருந்த 90 பேரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனால் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

2 வெற்றி தினங்கள்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட வீடியோவில், ``2ம் உலகப் போரின் போது நமது முன்னோர்கள் என்ன செய்தனர் என்பதை மறந்திருக்க மாட்டோம். அப்போது, ஏறக்குறைய 8 லட்சம் உக்ரைனியர்கள் உயிரிழந்தனர். அந்த போரில் மொத்தம் 5 கோடி பேர் உயிரிழந்தனர். அது திரும்ப நிகழ வேண்டாம். நமக்கு இனிமேல் 2 வெற்றி தினங்கள் வரும். சிலருக்கு ஒரு வெற்றி தினம் கூட இல்லாமல் போகும். அன்று வென்றோம்; இன்று வெல்வோம்,’’ என்று கூறியுள்ளார்.

Tags : Russia ,Mariupol , The intensification of the attack was the intensity with which Russia captured Mariupol
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!