
சென்னை: தடைசெய்யப்பட்ட நாடானா ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் பிடிபட்டனர். சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சஜன் (50), காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சூசை ராஜா (52) ஆகியோரின் பாஸ்போர்ட்களை சோதனையிட்டனர். அதில் இருவரும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கிவிட்டு, பின்பு சார்ஜா வழியாக இந்தியா வந்தது தெரியவந்தது.
இருவரையும் வெளியில்விடாமல், குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். விசாரணையில், கட்டிட வேலைக்காக சார்ஜா சென்றதாகவும், ஆனால் அங்கு எங்களுக்கு சரியான வேலை கிடைக்காததால், ஏமனுக்கு சென்றதாகவும், ஏமனுக்கு செல்ல தடை இருப்பது தங்களுக்கு தெரியாது என்றும் கூறினர். இருவரும் ஏமன் நாட்டில் தங்கியிருந்தபோது, யார் யாரிடம் தொடர்பில் இருந்தார்கள். அதோடு இவர்கள் செல்போன் உரையாடல்கள் உட்பட அனைத்தையும் ஆய்வு செய்தனர். அதன்பின்பு குடியுரிமை அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு இரண்டு பேரையும், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா்.