×

விக்னேஷ், தங்கமணி மரணத்தில் எதையும் மறைக்கவில்லை மனித உரிமை காத்திட, உரிய நீதி கிடைத்திட அரசு துணை நிற்கும்: முதல்வர் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல்,  தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஆயிரம் விளக்குக் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ரவீந்திரன் என்பவரைத் தாக்கிவிட்டு அவரது செல்போனை இரு நபர் தட்டிச் சென்றுவிட்டார்கள். சென்னைத் தலைமைச் செயலக தலைமைக் காவல் நிலையத்தில் விக்னேஷ் மரணம் குறித்து தகவல்  தெரிவித்து அதற்கு சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று கேட்டேன். இன்னும்  அதற்கு பதில் வரவில்லை. இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கெனவே விக்னேஷ் மரணத்தைப் பற்றி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் மட்டுமல்ல, எதிர் வரிசையில் அமர்ந்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் இது குறித்துப் பேசியிருக்கிறீர்கள். அப்பொழுதே நான் அதற்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறேன். மீண்டும் அந்த பிரச்னையைக் கிளப்பி ஏன் சிபிஐக்கு மாற்றப்படவில்லை என்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இதே அவையில் நான் பேசுகின்றபோது சொன்னேன், “மனித உரிமை காக்கப்பட்டு உரிய நீதி  கிடைத்திட இந்த அரசும், திமுகவும் என்றைக்கும் துணை நிற்கும் என்று நான் உறுதியளித்திருக்கிறேன்.

ஏப்ரல் 19ம் தேதியன்று விக்னேஷ் இறந்தார். 24ம் தேதியன்று இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.7.5.2022 அன்று சம்பந்தப்பட்ட காவல் துறையினர் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம்,  தண்டராம்பட்டு காவல் நிலையம், சரகம் தட்டரணை கிராமத்தைச் சார்ந்த தங்கமணி என்பவரது மரணத்தைப் பொறுத்தவரையில், நீதித் துறையின் நடுவர் முன்னிலையில் உடற் கூராய்வு நடந்துள்ளது. அந்த அறிக்கை பெறப்பட்டவுடன்  உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும் என்று இந்த  அவையில் 29.4.2022 அன்று தெரிவித்திருந்தேன்.

இதன் பிறகு 4.5.2022 அன்று  இதே அவையில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணை மாநில குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. தங்கமணியைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய காவல் துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாநிலக் குற்றப்புலனாய்வுத் துறையின் புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கும் என்று நான் தெரிவித்திருக்கிறேன். ஆகவே, விக்னேஷ் மற்றும் தங்கமணி ஆகியோரின் மரணத்தில் இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. ஒளிவு மறைவற்ற வெளிப்படையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்திருக்கிறது.

நீங்கள்  கேட்பதற்காக நான் போட்டிக்கு கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். சாத்தான்குளம் காவல் நிலையத்தை, இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில்  உயர் நீதிமன்றம் கொண்டு வந்தது உங்கள் ஆட்சியில். இத்தனைக்கும் மேல் அந்த வழக்கை உயர் நீதிமன்றம்தான் சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதை எதிர்க்கட்சித் தலைவருக்கு நினைவுபடுத்துகிறேன். ஆகவே, இந்த அரசு உங்களைப்போல, குற்றவாளிகளை நிச்சயமாக காப்பாற்றாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், விக்னேஷ், தங்கமணி விவகாரங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி: நடுநிலையோடு இந்த வழக்கு நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோருகிறோம்.  
சபாநாயகர் அப்பாவு: தமிழ்நாடு போலீஸ் ஏதாவது தவறான விசாரணை இருந்தால்தான் மாற்றுங்கள் என்று கேட்க வேண்டும். எல்லாமே சரியாக நடக்கும்போது என்ன?
எடப்பாடி பழனிசாமி: சிபிஐ விசாரித்தால்தான் நடுநிலையோடு இருக்க முடியும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மீண்டும், மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக, முறையாக, சாத்தான்குளம் விஷயத்தில் எப்படி திசை திருப்ப முயற்சித்தீர்களோ அது மாதிரி இதை திசை திருப்ப நாங்கள்  முயற்சிக்க மாட்டோம். முறையாக நடவடிக்கை எடுப்போம். அது யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய முடிவு. இதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Vignesh ,Thangamani , Vignesh, Thangamani did not hide anything in death: Govt will stand up to protect human rights, get due justice: CM
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...