சட்டமன்ற நூற்றாண்டு விழா, கலைஞர் படத்திறப்பு விழா பேரவை மண்டபத்தில் இன்று சிறப்பு மலர் வெளியீட்டு விழா

சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருப் படத் திறப்பு விழா நிகழ்வினையொட்டிய விழா சிறப்பு மலரினை 10.5.2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணியளவில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் வெளியிட முதலமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பேரவை முன்னவர், அமைச்சர்கள், பேரவைத் துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எதிர்க்கட்சிக் கொறடா, இந்திய தேசியக் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்றத் தலைவர்கள், முன்வரிசைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் தனித்தனியாக அழைத்ததாகக் கருதி, இந்நிகழ்ச்சியில் நாளை காலை 9 மணிக்கு கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

* அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

திரவிய தொழிற்சாலை தொடங்க மானியத்துடன் கூடிய கடன் பேரவையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வளையங்குளத்தில் வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது : முதலீட்டு மானியத் திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் 13 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2 கோடியே 78 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு தொழில்கள் நடைபெற்று வருகிறது. நறுமண பூக்களை பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க முன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் வாங்கி தொழில் தொடங்க அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும்.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீண்டும் புதிதாக நடைமுறைக்கு கொண்டு வர சட்டத்திருத்தம்: அமைச்சர் கே.என்.நேரு சட்டமசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை 53 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவான சேவைகளை வழங்க பல சவால்கள் உருவாகியுள்ளன. இந்த சவால்களை சிறப்பாக பூர்த்தி செய்வதற்காக, நகராட்சி விவகாரங்களில் தினசரி மேலாண்மைக்கான சிறப்பு அமைப்பின் மூலம் நிர்வாகத் திறனை வலுப்படுத்துவது அவசியமாக உள்ளது.

இதற்கான சட்டங்களை இயற்றவும், நிர்வாக ரீதியான செயல்பாட்டு சூழலை வழங்கவும் அவசரம் மற்றும் கட்டாயத் தேவை உள்ளது. இதற்கு ஏதுவாக 1998ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீண்டும் புதிதாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக சட்டத் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த சட்டமசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த சட்டத்தை இடை நிறுத்தம் செய்துள்ள சட்டத்தை நீக்கவும் இந்த சட்டமசோதா விளைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: