×

வயதானவர்கள், நோயுற்றவர்கள் அதிகம் பாதிப்பு ஒலி மாசால் பாதிக்கப்படும் குமரி மாவட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

நாகர்கோவில்: ஒலி மாசு காரணமாக, குமரி மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. வாகனங்களில் இருந்து அதிகமாக ஒலிக்கப்படும் ஹாரன் மற்றும் வழிபாட்டு தலங்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த ஒலிப்பான்கள் உள்ளிட்டவற்றின் பல தொந்தரவுகளால் குமரி மாவட்டத்தில் தற்போது ஒலி மாசு அதிகரித்துள்ளது. ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நாட்டின் பெரு நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலி அளவு கண்காணிப்பு மையங்கள் மூலமாக, ஒலி அளவுகளைப் பதிவு செய்கின்றது. இந்த பதிவுகளின் தரவுகள் மூலம் ஒலி மாசு அதிகரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒலி மாசு காரணமாக வயது முதிர்ந்தவர்கள், நோயுற்றவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியவில்லை.

தொடர்ந்து ஒரு வாரம், பத்து நாட்கள் இப்படி ஒலி மாசுக்கு உள்ளாகும் போது பெரும்பாலான மக்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஏற்கனவே சிக்கலானதாக இருக்கும் சாலைப் போக்குவரத்து இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது. விபத்துக்கள் நடக்கின்றன. ஒலி மாசு பிரச்சினை பெரும் சிக்கலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அதிகமான மக்கள் அடர்த்தியாக வாழும் நெருக்கடிகள் மிகுந்த நகரமாக நாகர்கோவில் மாறி உள்ளது. இதில் ஒலி மாசு பாதிப்பு மேலும் நகர மக்களின் வாழ்க்கையே பாதிப்பதாக அமைந்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கூறுகையில், அனைத்து மத வழிபாட்டு தலங்களில், கூம்புவடிவக் குழாய்க்கு பதிலாக அதைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் ஓசை எழுப்புவதற்கும், விழாக்கள் கொண்டாடுவதற்கும் காவல்துறை அனுமதி பெறும் நடைமுறை கடினமாக அமல்படுத்தப்படவேண்டும். கார்கள், பைக்குகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிகளவு டெசிபல் கொண்ட ஒலி எழுப்பான்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும். மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் அருகே இது தொடர்பாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும். போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்கும் போது அதிகளவில் ஒலி எழுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை தவிர்க்க வேண்டும். ஒலி மாசு தொடர்பாக மக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறி உள்ளார்.

Tags : Kumari District , Elderly, sick, overweight, sound, demand
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...