×

கொடைக்கானலில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாதம் 3 அல்லது 4வது வாரத்தில் கோடைவிழா நடைபெற உள்ளது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக மலர்க்கண்காட்சி நடைபெறும். இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல லட்சம் மலர்கள் தயார்நிலையில் உள்ளன. மலர் அலங்காரங்கள், மலர்கள் கொண்ட காட்சி அரங்கங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

கொடைக்கானலில் வழக்கமாக 2 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும். ஆனால் மலைகளின் அரசி ஊட்டியில் 5 நாட்கள் மலர் கண்காட்சி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கொடைக்கானலில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினரிடம் கேட்டபோது, ‘‘கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தற்போது பல லட்சம் மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் பூங்கா முழுவதும் கோடி மலர்கள் பூத்து குலுங்கும். இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

இதனிடையே விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஜில்லென நிலவிய இதமான குளிரை ரசித்து அனுபவித்தவாறு நகரை வலம் வந்தனர். சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எனவே வார இறுதி நாட்களில் கூடுதல் போலீசார் பணியமர்த்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal , Kodaikanal, 3 days, flower show. Tourists
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...