பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதாவின் கம்பெனியில் என்ஐஏ ரெய்டு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதாவின் மும்பை டி-கம்பெனியில் தேசிய புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்தி வருகிறது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான டி-கம்பெனி மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியின் ரியல் எஸ்டேட் மேலாளர் மீதான ஹவாலா மோசடி தொடர்பான புகாரை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. மும்பையில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. அதாவது போரிவாலி, சாண்டாக்ரூஸ், பாந்த்ரா, நாக்பாடா, கோரேகான், பரேல் ஆகிய இடங்களில் ரெய்டுகள் நடக்கிறது. இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டான்.

தாவூத் இப்ராஹிம் தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரியில் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, தாவூத் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. தீவிரவாத செயல்களுக்கான நிதி திரட்டுதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போலி நாணயம் (எஃப்ஐசிஎன்) மூலம் இந்தியாவில் தீவிரவாதத்தை பரப்ப டி-கம்பெனி செயல்பட்டு வந்தது. இதுமட்டுமின்றி, தாவூத் இப்ராஹிமும், அவரது டி - நிறுவனமும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்கொய்தா மூலம் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. டி - நிறுவனமானது ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாகும்.

தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி - கம்பெனியின் விவகாரங்கள் மட்டுமின்றி, நிழல் உலக தாதாக்களான சோட்டா ஷகீல், ஜாவேத் சிக்னா, டைகர் மேனன் ஆகியோர் தொடர்பான தீவிரவாத நடவடிக்கைகளையும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் ​​தாவூத் இப்ராஹிம் கராச்சியின் ஆடம்பரமான பங்களாவிலும், வேறு சில இடங்களிலும் தங்கியுள்ளதாக ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: