×

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்து இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 130 டாலர் வரை உயர்ந்தது. அதிகமான விலையேற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. போர் சூழல் காரணமாக விநியோகத் தொடர்பு பாதிக்கப்பட்டு, வர்த்தகம் சீர்குலைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிற்கு எதிராக வர்த்தகத்தை தடை செய்துள்ளதால், பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது. முதலீடுகளை பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன்மதிப்பு உயர்ந்து, பல நாடுகளின் பணமதிப்பு சரிந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. ரூபாயின் மதிப்பானது, 77 ரூபாயை தாண்டி வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 76 ரூபாய் 93 காசுகளாக முடிவடைந்திருந்தது. தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு 77 ரூபாய் 47 காசுகளாக உள்ளது. இது முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச்செய்திருக்கிறது. இதற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் புதைந்துள்ளது என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தற்போது முதலமைச்சராக இருந்தால் ஒன்றிய அரசை தேச விரோத அரசு என சாடியிருப்பார் என்றும், பிரதமர் மோடி தற்போது அமைதியாக இருப்பது ஏன்? என்றும் வினவியுள்ளார்.    


Tags : US, dollar, Indian rupee, depreciation, investor
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...