கஞ்சா போதையில் 8 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல்: கோவை அருகே பரபரப்பு

கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி.அன்.டி. காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (48), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அங்கு திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா (23) என்பவர் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவரது நண்பர்களான ஹரிஹரன் (24), முத்துவேல் (25), சங்கர் (22), ராஜா (23), முருகன் (22) ஆகிய 5 பேர் சிவா வசிக்கும் வீட்டில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மதுஅருந்தியும், கஞ்சா பயன்படுத்தியும் ரகளை செய்து கொண்டிருந்துள்ளனர். இவர்களது சத்தம் அதிகமாக இருந்ததால், வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் அவர்களை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சிவா திருநெல்வேலிக்கு சென்றுள்ளார்.

போதை மயக்கத்திலிருந்த அவரது நண்பர்கள் 5 பேரும் மீண்டும் நேற்று மதியம் 2 மணியளவில் அரிவாள், கத்தி கம்புகளுடன் இவர்களை கண்டித்த வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரத்தையும், அவரது மனைவி பூர்ணிமா (21) மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைத்தனர். இதபை் பார்த்து தடுக்க வந்த பக்கத்து வீட்டுகாரரான சியாம் என்பவரை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். இதில் அவரும் படுகாயமடைந்தார். போதைக்கு தலைக்கு ஏறிய நிலையில் வீதியில் அரிவாளுடன் சுற்றிய 5 பேரும் அங்கிருந்த பொதுமக்களையும் மிரட்டி, எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்த அபி, சசி, பிருந்தா (43), தர்ணிகா உள்ளிட்டவர்களையும் தாக்கியதில் அவர்களும் காயமடைந்தனர்.

மேலும் அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமியை (53) தாக்கி, அவரை அரிவாளால் வெட்ட துரத்தியுள்ளனர். அவர் வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டதால், அவர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த தகவலறிந்த போலீசார் அங்கு வந்தனர். மேலும், பொதுமக்கள் உதவியுடன் அவர்களை பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவா (25), ஆறுமுகம் (23), மகாராளி (25), ஹரிகரன் (24), சத்திய பாலன் (25), முத்துவேல்முருகன் (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சுரேஷ் (30) உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: