×

ஆதீனங்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் கோயிலில் இந்துசமய  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் சென்று பார்வையிட்டனர். குளங்களை சீரமைக்க 70 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மண்டபங்களை சீரமைக்க 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டார். இதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்தால் அதனை நேரில் சென்று ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சில இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. குளம் வற்றியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்றத்தில் உறுப்பினர் தாயகம் கவி  மற்றும் மேயர் வேண்டுகோளை ஏற்று சேமாத்தம்மன் கோயிலில் ஆய்வு செய்துள்ளோம்.

ஒரு ஆண்டுக்கு 1000 ஏக்கர் குறைந்தது 500 கோடி ரூபாய் அளவிலான கோயில் சொத்துக்களை மீட்கப்பட வேண்டும் என்ற அளவில் செயல்திட்டம் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் சொத்துக்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யமுடியாத வகையில், சுற்றுச்சுவர் அமைத்து, இந்துசமய அறநிலையத்துறையின் துறை கோயிலுக்கு சொந்தமான சொத்து என கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது.45 இடங்களில் இருந்த பல்லக்கு பவனி தற்போது குறைந்து வருகிறது. இனி வருங்காலத்தில் அதற்கு மனித நேயத்துடன் கூடிய மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஜீயர்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட ஆன்மீக பெரியவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் ஆவேச குரலுக்கு இந்த அரசு எதிர்வினை ஆற்றாது.

அவர்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்கும். வசைபாடியவர்கள் என்று பாராது அவர்களும் ஆளும் அரசை வாழ்த்தும் அளவுக்குசெயல்படுவோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார். முன்னதாக சேமாத்தம்மன் கோயிலில் அமைச்சர் ஆய்வு செய்தபோது செய்தியாளர் சந்திப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் திடீரென பங்கேற்றார். பின்னர் பேசிய ஜீயர், ‘தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்துக்கு அனுமதி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் வெற்றிப்பெறும் போது சக வீரர்கள் அவர்களை தோளில் தூக்கி சுமப்பது போலத்தான் சிஷ்யர்கள் ஆதீனங்களை சுமக்க நினைக்கிறார்கள்’’ என்றார்.



Tags : DMK government ,Minister ,BK Sekarbabu , Athena, Request, DMK Government, BK Sekarbabu
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...