முல்லை பெரியாறு அணையில் இருமாநில தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு..!!

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். பருவ காலநிலை மாறுபாடுகளான மழை மற்றும் வெயில் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை பற்றி உச்சநீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது; தற்போது கூடுதலாக 2 பேரை நியமித்துள்ளது. அதன்படி, தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள பிரதிநிதியாக நீர்பாசனத்துறை கூடுதல் தலைமை பொறியாளர் டி.கே.ஜோஸ், கூடுதலாக இந்த குழுவில் தமிழகம் சார்பில் சேர்க்கப்பட்ட காவேரி  தொழில்நுப்ட குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள மாநில நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் சேர்ந்து முல்லை பெரியாறு அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைக்கப்பட்ட இந்த குழுவினர் முல்லை பெரியாறில் முதல்முதலாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். 1,200 அடி நீளமுடைய பிரதான அணை, பலப்படுத்த வேண்டிய 240 அடி நீளமுடைய  பேபி அணை மதகு பகுதிகளில் உள்ள 13 மதகுகள் இயக்கம் மற்றும் 2 சுரங்க பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்தனர். தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன் அணை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். டெல்லியில் நடைபெறும் கலந்தாலோசனை கூட்டத்திற்கு பின் ஆய்வு அறிக்கை 2 மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Related Stories: