×

ஒன்றிய அரசுக்கு சொந்தமான பள்ளிவிளை உணவு கிடங்கை பயன்படுத்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி-குமரிக்கு வரும் கூடுதல் தானியங்கள் நெல்லையில் தான் சேமிக்க முடியும்

நாகர்கோவில் :  நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள ஒன்றிய அரசின் உணவு கிடங்கில் 12 ஆயிரம் டன் வரை உணவு தானியங்கள் வைக்க தனியாருக்கு அனுமதி அளித்துள்ள தகவல், தொழிலாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.நாகர்கோவில் பள்ளிவிளையில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான உணவு தானிய குடோன் அமைந்துள்ளது.

சுமார் 18,500 டன் உணவு தானியங்கள் இங்கு இருப்பு வைக்க முடியும். குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்க ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் உணவு தானியங்கள் சரக்கு ரயிலில் நாகர்கோவில் கொண்டு வரப்படும். பின்னர் லாரிகள் மூலம் ஒன்றிய அரசின் உணவு குடோனுக்கு கொண்டு வரப்படும். பின்னர் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.  ஒன்றிய அரசின் குடோனில் உணவு தானியங்களை கொண்டு வர 85 லாரிகள் இயங்குகின்றன.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் குடோனில் சுமார் 12 ஆயிரம் டன் அளவிலான உணவு தானியம் இருப்பு வைப்பதற்கான இடத்தை, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளனர். தற்போது சம்பந்தப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம் அவர்கள் வாடகைக்கு எடுத்த பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே இனி ஒன்றிய அரசின் இந்த குடோனில் சுமார் 6 ஆயிரம் டன் வரை மட்டுமே உணவு தானியங்கள் இருப்பு வைக்க முடியும். அதற்கு மேல் உணவு தானியங்கள் வந்தால் அவற்றை திருநெல்வேலியில் உள்ள குடோனில் இறக்கி விடுவார்கள்.

 அங்கிருந்து தான் உணவு தானியங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொண்டு வர முடியும். இதனால் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என தெரிகிறது. மேலும் ஒன்றிய அரசின் குடோனில்  உள்ள லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் டன் இருப்பு வசதியில், அவர்களுக்கு தேவையான உணவு, தானியங்களை கொள்முதல் செய்தும் வைத்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. தற்போது இந்த பிரச்சினையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் குடோனில் இயங்கும் லாரி டிரைவர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறி உள்ளனர்.

Tags : Union , Nagercoil: Private sector allowed to store up to 12,000 tonnes of food grains in the United Nations Food Depot at Nagercoil School.
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...