தோகைமலை அருகே கீழவெளியூர் பெரியகுளத்தில் சமூக ஒற்றுமை மீன்பிடி திருவிழா

தோகைமலை : தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பெரிய குளத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்தது.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான பெரியகுளம் உள்ளது. பருவமழை காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இக்குளத்தில் தேங்கி நிற்கிறது.

தேங்கி நிற்கும் மழைநீரானது மதகு வழியாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது. இதேபோல் மழைகாலங்களில் மழைநீரோடு பல்வேறு வகையான மீன்கள் குளத்திற்கு வருது உண்டு. இந்த குளத்தில் வளர்ந்து வரும் மீன்களை கோடைகாலங்களில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக சேர்ந்து மீன்படி திருவிழாவாக மீன்களை பிடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மழை காலங்களில் இக்குளம் நிரம்பினாலும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாமல் மீன்கள் வராமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பி வழிந்தது. இதனை அடுத்து பெரும்பாலான ஏரி குளங்களுக்கு பல்வேறு வகையான மீன்கள் வரத்தொடங்கியது. இதேபோல் கீழவெளியூர் பெரிய குளத்திற்கும் பல்வேறு வகையான மீன்கள் வளர்ந்து வந்தது. தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் கீழவெளியூர் பெரியகுளத்தில் உள்ள மீன்களை பிடிக்க ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர்.

இதனை அடுத்து கிராம மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் 25 ஆண்டுளுக்கு பிறகு நேற்று சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு கீழவெளியூர் முக்கியஸ்தர் பாஸ்கர் தலைமை விகத்து வெள்ளை துண்டை விசிறி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். கிராம முக்கியஸ்தர்கள் குப்பமுத்து, பொன்னம்பலம், முருகன், ஜோதிமுருகன், பழனிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கல்லடை ஊராட்சியில் உள்ள கல்லடை, மேலவெளியூர், கீவெளியூர், மஞ்சம்பட்டி, இடையபட்டி, அழகனாம்பட்டி, பிள்ளையார்கோவில்பட்டி, செவகாட்டுப்பட்டி உள்பட புத்தூர், வடசேரி, பில்லூர், பாதிரிபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தூரி, வளை, சேலைகள் ஆகியவற்றை கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்ததால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ந்தனர்.

Related Stories: