×

டெல்லியை சுருட்டி வீசி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி; பிளே ஆப் சென்றால் மகிழ்ச்சிதான் இல்லையென்றாலும்......: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் குவித்தது. அதிகபட்சமாக டெவன் கான்வே 49 பந்தில், 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 87 ரன் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் 41 (33 பந்து), ஷிவம் துபே 32 (19 பந்து), டோனி 21 (8 பந்து) ரன்  அடித்தனர். டெல்லி பந்துவீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 3, கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய டெல்லி 17.4 ஓவரில் 117 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை 91 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 25, ஷர்துல் தாகூர் 24, ரிஷப் பன்ட் 21, டேவிட் வார்னர் 19 ரன் அடித்தனர். சென்னை பந்துவீச்சில் மொயின் அலி 2, பிராவோ, முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார். 11வது போட்டியில் சென்னை 4வது வெற்றியை பெற்றது. டெல்லி 6வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் சென் னை கேப்டன் டோனி அளித்த பேட்டி: ‘‘இது மிகச்சிறந்த ஆட்டமாக இருந்தது. டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால், மனதிற்குள் டாஸ் ஜெயிக்காமலே இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணுவேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவர் ஹிட்டர்ஸ்களை தடுத்து நிறுத்துவதுதான் மிகவும் முக்கியம். முகேஷ், சமர்ஜித் அனுபவங்களை பெற இன்னும் சில காலம் பிடிக்கும். எந்த பந்தை போட வேண்டும், போடக் கூடாது என்பதுதான் டி20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியம், என்றார்.

பிளே ஆப் செல்ல விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த டோனி, ‘‘எனக்கு கணக்கு சுத்தமாக வராது. நெட் ரன்ரேட் பெரிய அளவில் உதவாது என நினைக்கிறேன். ஐபிஎல் போட்டிகளை என்ஜாய் செய்து விளையாட வேண்டும். மற்ற எதையும் நினைத்து பார்க்காமல், அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருக்க வேண்டும். பிளே ஆப் சென்றால் மகிழ்ச்சிதான். செல்லவில்லை என்றால், இதுதான் கடைசி சீசன் கிடையாது. அடுத்த சீசனில் பார்த்துக்கொள்வோம், என்றார்.

டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் கூறுகையில், எல்லா துறைகளிலும் எங்களை எதிரணியினர் மிஞ்சினர். அடுத்த 3 ஆட்டங்களை மட்டுமே நாங்கள் எதிர்நோக்குகிறோம். அவற்றில் வெற்றி பெற்றால் தகுதி பெறமுடியும். அணியில் காய்ச்சல் மற்றும் கோவிட் பாதிப்பு நிறைய உள்ளன, ஆனால் அதை சாக்காக சொல்ல விரும்பவில்லை, என்றார்.

Tags : Delhi ,CSK ,Tony , Delhi, Curling, 91 runs, win, play-off, Tony
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி