×

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை? : வானிலை ஆய்வு மையம்!!

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் மெல்ல மெல்ல வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த அந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தீவிரப்புயலாக மாறியது. அந்த தீவிரப்புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை(10ம் தேதி) வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு  வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக்கூடும்.

இதனால் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.11ம் தேதி முதல் 13ம் தேதி  வரை: வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 85 முதல் 95 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 105 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Asani storm , South East, Bay of Bengal, Asani, Storm, Meteorological Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...