×

மான் வேட்டையாடிய 4 பேர் கைது-நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே மானை வேட்டையாடிய சேலம் வாலிபர் உள்பட 4 பேரை கைது செய்த வனத்துறையினர், நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில், வனவர் துரைக்கண்ணு, வன காப்பாளர்கள் முருகன், அங்குரதன், வன காவலர் பூபதி உள்ளிட்டோர், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பிரிவுக்குட்பட்ட கணபதிப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக 4 பேர், கையில் பெரிய மூட்டையுடன் வந்தனர். அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மூட்டையில், தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில், சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மான் உடல் இருந்தது. இதையடுத்து, 4 பேரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜூ(65), முருகன்(36), மாதையன்(58), சேலம் அழகாபுரம் அருகே நகரமலை அடிவாரத்தைச் சேர்ந்த செல்லப்பன்(34) என்பது தெரியவந்தது.

அவர்கள் கணபதிப்பட்டி பகுதியில், மானை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி, தலையை தனியாக துண்டித்து இறைச்சியை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த போது வனத்துறையினரிடம் பிடிபட்டது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மான் இறைச்சி மற்றும் உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையை தடுக்க, ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வன குற்றங்களை தடுக்கவும், வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வன ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வன ஊழியர்களும் வனப்பகுதியில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்,’ என்றார்.

Tags : Krishnagiri: Forest officials arrested four persons, including a Salem youth, for poaching deer near Krishnagiri.
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை