மாநில அரசை கண்டித்து விஜயவாடாவில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாபெரும் போராட்டம்-ரயில், பஸ்களில் புறப்பட்ட 20 பேர் கைது

திருப்பதி :  மாநில அரசை கண்டித்து விஜயவாடாவில் இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள திருப்பதியில் இருந்து ரயில், பஸ்களில் புறப்பட்ட 20 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பஸ் கட்டண உயர்வு மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து விஜயவாடாவில் இன்று மாபெரும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்தும் கட்சியினர் நேற்று அந்தந்த பகுதிகளிலிருந்து ரயில் மற்றும் பஸ்கள் புறப்பட்டு சென்றனர்.

அதன்படி, திருப்பதி மாவட்டம் பைராகிபட்டிடா பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து நேற்று மாலை ரயில் மற்றும் பஸ்கள் மூலமாக விஜயவாடா செல்ல புறப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பதி காவல் துறையினர் உடனே அங்கு சென்றனர். பின்னர், போராட்டத்தில் பங்கேற்க புறப்பட தயாராக இருந்தவர்களை பலவந்தமாக கைது செய்தனர். இதில், மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், இரவு அனைவரையும் விடுவித்தனர்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘மாநில அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தபடுகிறது.

இதில், பங்கேற்க முயன்றவர்கள் காவல் துறையை கொண்டு அடக்கு முறையில் ஈடுபடும் மாநில அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. காவல்துறையை கொண்டு போராட்டத்தை தடுக்க முடியாது. இது மேலும் தீவிரமடையும். மாநில அரசு உடனே உயர்த்தப்பட்ட வரிகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையேன்றால், நாங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்’ என்றனர்.

Related Stories: