×

13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறப்பு பெற்றது சிதிலமடைந்த மழவராயநத்தம் சிவன் கோயில்-திருப்பணி நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவைகுண்டம் :  13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மழவராயநத்தம் சிவன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஸ்ரீவைகுண்டம் அருகே நெல்லை - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆதிநாதபுரத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மழவராயநத்தம். இங்கு பழமைவாய்ந்த சிவன் கோயில் உள்ளது. கி.பி 13ம் நூற்றாண்டில் குலசேகரபாண்டியன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பழங்கால மன்னரின் பெயரால் மழவராயநத்தம்  என்றழைக்கப்படும் ஊரின் ஈசான மூலையில் நெல், வாழை தோப்புகளின் மத்தியில் கிழக்கு பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது.  இதன் எதிரே தெப்பக்குளமும், கோயில் மகா மண்டப வாசலில் வலதுபுறம்  அறம் வளர்த்த நாயகி அம்பாள் சன்னதியும் உள்ளது. தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்ட சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து ஏராளமானோர் பூரண நலம் பெற்றுள்ளனர் என்பதால், சுற்றுவட்டார மக்கள் வைத்தியநாதர் என்று பக்திப் பெருக்கோடு அழைக்கின்றனர்.

கோயிலில் தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பூஜைகள் நடந்து வருகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதுதவிர பிரதோஷ வழிபாடு, அஷ்டமி பூஜை, மாத கார்த்திகை திருவாதிரை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு, ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு உற்சவம், கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவம், கார்த்திகை சோமவார விசேஷ அபிஷேகம், கார்த்திகை மகா தீபம் ஏற்றுதல், மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி, ஆருத்ரா தரிசனம். தைப்பொங்கலன்று சிறப்பு வழிபாடு, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் கோயில் கோபுரங்களும், சுவர்களும் விரிசல் விழுந்து காணப்படுவது பக்தர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மழவராயநத்தம் கோயில் நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்ட பிரசித்திப் பெற்றதாகும். கும்பாபிஷேகம் நடந்து 300 ஆண்டுகள் இருக்குமென கூறப்படுகிறது.

சிதிலமடைந்து காட்சியளிக்கும் கோயிலுக்குள் ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில் பல கோயில்களில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேக பணிகள் வேகமெடுத்துள்ளன. அதேபோல் இக்கோயிலையும் முழுமையாக சீரமைத்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

இக்கோரிக்கை தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், மழவராயநத்தம் கோயிலை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Tags : Malavarayanatham Shiva Temple , Srivaikuntam: To perform Kumbabhishekam at the ancient 13th century Malavarayanatham Shiva Temple.
× RELATED ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த...